06/04/2022
நீண்ட விடுமுறை..... முன்பதிவிட்ட பேருந்து... பேருந்தை எதிர்பர்த்தபடி ஏங்கிய கண்கள், நினைவுகளை சுமந்த நெஞ்சம்... கனவுகளை கடந்த பயணம், நலம் விசாரித்த சுற்றம்... வரவேற்று மகிழ்ந்த உறவுகள், சிரித்த இன்முகத்துடன் நட்புகள்... அம்மா போட்ட வண்ண கோலம், காதில் ஒலித்த தப்பு சத்தம்... மூக்கில் ஏறிய தீச்சட்டி புகை, நாசியை துளைத்த வேப்பிலை வாசம்... சாமியை குளிர்வித்த மஞ்சள் நீர், தாகம் தனித்த நீர்மோர்... இதை பார்த்து தானாய் வந்த பக்தி... காலை நேர உணவு, உச்சி வெயில் களைப்பு, மதிய நேர தூக்கம்... அணி வகுத்து வந்த விழாப் பேருந்து, அலை அலையாய் வந்த மக்கள் கூட்டம். நகர்ந்து செல்லும் வண்டி, மனதை வருடிய பேருந்து பாடல்கள்... ஒரு மணி நேர பயணம்! திருவிழா விளக்குகள், ஒலி பெருக்கி தோரணங்கள்... நினைவுகளை கண் முன் காட்டி செல்லும் ராட்டினங்கள்... கூட்டத்தில் செய்ய துடித்த சாமி தரிசனம்.. கோவிலுக்கு அழைத்து சென்றதே கடவுள் தான் என அறியாத பேதை உள்ளம்... கண்களில் பட்ட காட்சி, விழியில் நீர் வடிய கலங்கிய நெஞ்சம்.. தந்தை கழுத்தில் கால்கள் இட்டு அமர்ந்த குழந்தை.. திருவிழா ரசித்த ஞாபகம், ஆடி அசைந்து வந்த தேர்... காரகோசாமிட்ட பக்தர்கள், சிலிர்த்த தேகம்...சிலிர்க்க வைத்தது நான் தான் என புரிய வைத்த திடீர் மழை.. தலையில் போட்ட தலைப்பை, சொட்டு சொட்டாக நனைந்த மனது... வண்ண வண்ணமாய் பலூன்கள், காதில் விளக்கு வைத்த ரோபோ பொம்மை.. காற்றில் பறந்த சோப்பு நீர் குமிழிகள், காதை அடைத்த பீப்பி சத்தம்... ரிமோட் காரு வாங்க அழுத அக்கா மகள், அடுக்கி வாய்த்த பூரியை, வேடிக்கை பார்த்த நான்..! வருடம் ஒரு முறை மட்டுமே கிடைக்கும் திருவிழா டெல்லி அப்பளம்.., காற்றில் மிதந்து வந்த மல்லிகை மனம், பாதையில் கடந்து சென்ற பருவ வயது பெண்கள்... ராட்டினம் எறிய தருணம்.. வயிற்றில் பறந்த பட்டாம் பூச்சி... கண்களை மூடி கத்தி அலறிய ராட்டின குழந்தைகள்... மீண்டும் ஏறி விளையாடிட துடித்த மணம், ஏனோ நகரத்து வாழ்க்கையில் ... தொலைத்த இன்பங்களை ரசிக்க துடித்து, செல்பி (சுயமி)எடுத்த அற்ப குணம்... பழைமையில் புதுமையை புகுத்தி பார்த்த சிற்றின்பம்.. சூடாய் எரிந்த விறகு அடுப்பு, உண்டு ரசித்த கடலை பொறி.. அமர்ந்து உண்ட கட்டு சோறு.. பசுமையை காட்டிய கிராமத்து வாழ்க்கை, இதை சாதாரணம் என நினைத்த நாட்களை அசாதரணம் ஆக்கி போன, ந(ர)கரத்து வாழ்க்கை... இத்தனையும் பித்தனை போல் ரசிக்கும் குணம்.. உங்கள் கண்களுக்கும், மனதுக்குள்ளும் நெருடலை ஏற்படுத்திய எனது கிறுக்கல்கள்.. உங்கள் மனதின் அலைவரிசையை ஒத்த எனது குரல்.. இவை அனைத்தும் கட்டாயமாக .. தவம் இருந்தாலும் மீண்டும் கிடைக்க பெறாத #மகிழ்ச்சியே...திருவிழா தீண்டல்களுடன்...